Thursday, April 24, 2008

ஏக்கத்தின் கண்ணீர்


செங்கற்கள் என் தலை அழுத்த
எட்டிப் பார்க்கும் என் கழுத்து வலி,
பகல் உணவை ஞாபகம் செய்யும்
என் வயிற்று வலி,
தீயெனச் சுடும் வெயில்.

கிழிந்த என் மேலாடை வழி தெரியும்
உறுப்புக்களை ரசிக்கும் குரூரக் கண்கள்,
அசதியில் சற்று அசந்து நிற்கிற நேரம்
முறுக்கு மீசையின் வசை மொழிகள்,

மது அருந்த என் கன்னத்தில் அறைந்து
கைக்கூலி பிடுங்கும் தந்தை
எதற்காகவும் அழுததில்லை நான்

கடை வீதியில்…
கிழியா ஆடை அணிந்து
கண்ணுக்கு மையிட்டு
நுனிநாவில் ஆங்கிலம் பேசி
புத்தகப்பையுடன்
எனைக் கடந்து செல்லும் - என்
வயதொத்த பெண்களைப் பார்க்கையில்
வேகமாய் வந்து - என்
பாதங்களை நனைத்து விடுகிறது
என் கண்ணீர்….



க.பிரசன்னா

Saturday, April 5, 2008

சே...

என்னைக் கவர்ந்தவர் என் ஓவியத்தில்...
(ஓவியத்தின் மேல் "க்ளிக்" செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.)

க.பிரசன்னா.

Tuesday, April 1, 2008

மீன் தொட்டி..

வித்தியாசமாய் ஓர் முயற்ச்சி.. பார்த்துட்டு சொல்லுங்க.
(ஓவியத்தின் மேல் "க்ளிக்" செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.)
க.பிரசன்னா.

Saturday, March 29, 2008

பாசம் (பேசும் ஓவியம்)

இந்த ஓவியம் நிச்சயம் உங்களுடன் ஏதோவொன்று பேசும் என்று நம்புகிறேன்..
(ஓவியத்தின் மேல் "க்ளிக்" செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.)
க.பிரசன்னா

Friday, March 28, 2008

இலங்கைத் தமிழரின் இன்றய நிலை..



இலங்கை தமிழர்களின் இன்றய நிலையை எனது இந்த ஓவியத்தின் மூலம் அறிந்து கொள்க..

(ஓவியத்தின் மேல் "க்ளிக்" செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.)

க.பிரசன்னா

Tuesday, March 25, 2008

அசாத்தியங்கள்


மேற்குத்தொடர்ச்சி மலைகளில்
தவிர்க்க முடியா வளைவுகள்
போல நீ…

தகுதி இழந்து
ஆழங்கள் தேடி
ஆதற்குள்ளும் பெய்யும்
மேகங்கள் என நான்!

புள்ளியில் கூடுமா நேசம்….?

அ.டெனிசியஸ்

Saturday, March 22, 2008

குறைமாதக்கடிகாரம்


சலனப் பிழை என்றும்
கண மாற்றம் என்றும்
சஞ்சலம் நீள்கிறது

காலை-மாலை-சூரியன்
நீ - நான் - காதல்

மெய்ப்பொருள் தேடியலையும்
மனிதப் பிழையொன்று போல
சில முட்களின் பிழை நானும்!




அ.டெனிசியஸ்




Tuesday, March 18, 2008

பத்தினிகள்...


முடிவு செய்யப்படாத
கூந்தல் ஒன்றுக்காய்
மல்லிகைப் பூ
சேமிக்கும் ஒருத்தன்,
மூன்று தூர நிமிடங்களுக்கு
முந்ணூறு ரூபாய் கொடுக்கிறான்

எந்த விரல் சூட்டுமென,
சில கூந்தல் காரிகளுக்கு
முந்தானை விலகும்வரை
தெரிவதில்லை

ஊட்டியில் கடல் கொந்தளிப்பாம்!
பத்தினிகள் என்று
யாருக்கு யார் சூட்டுவது?

முகவரி மாறும் கூந்தல் காரிகள்
தாழ்ந்து விடவில்லை
முகவரி உள்ளதெனக் கூறும்
வாடகை வீட்டுக்காரிகளுக்கு…!


அ.டெனிசியஸ்

Sunday, March 16, 2008

நீ வருவாயென..


அன்பே நீ உணர்வாய்
திடீரென உவர்ப்பு அதிகமான
இக்கடலில் என் கண்ணீர்
மாத்திரமே கலந்திருக்குமென்பதை.

உன்னிடம் சேர்க்கப்பட மாட்டாது
என்றறிந்தும்
மிதந்து வரும் இவ்வலைகளினூடே
அனுப்பி விடுகிறேன்
என் காதலையும்,கண்ணீரையும்.

நீ சென்ற படகினை
பின்தொடர்ந்த காற்றின் வேகத்துடனே
கரைந்து சென்று விட்டது
என் பசியும்,தூக்கமும்.

நீயற்ற பகற்பொழுதுகலில்
நரகத்தின் சாயல் தெரிகிறதெனக்கு
அதைவிடக் கொடுமை
நித்திரையற்று உன் நினைவுகள் சுமந்து
கடக்க நேரிடும் இரவுகள்.

ஐந்து நாள் கடந்தும்
திரும்பாத உன் படகின் மீது
நம்பிக்கையற்று போய்விட்டது
உன் உறவுகளுக்கு.

எனக்கு தெரியும்..
என்றேனும் நீ வருவாய்

அன்று..

வெறுமயாய் கழிந்த
பகற் பொழுதுகளையும்
முத்தங்கள் பறிமாறப்பட்ட
நமதுஇரவுகளையும்
இப்பாறையில் மோதும்
அலைகளின் இறைச்சலின் மத்தியில்
நிச்சயம் நாம் மீட்டெடுப்போம்.


க.பிரசன்னா


Monday, March 3, 2008

சுடும் குரல்


இலைகளில் வெயில்
எழுதுகிறது ஒளிக்கவிதை.

வெக்கையை சுவாசிக்கும் சுவர்கள்
மனிதர்களில்
உஷ்ணமூச்சை உமிழ்கின்றன.
தண்ணீர் தேடி நெடுநேரமாக
அலைந்துகொண்டிருக்கிறதொரு தெருநாய்.
இக்கொடு மதியத்தில்
எதையோ கூவி விற்றபடி போகும்
முதிய பெண்ணின் குரலில்
செருப்பணியாத பாதங்களின்
சூடு தகிக்கிறது.


இணையத்தில் எழுத-எழுதி இணைகிறோம்


அன்புள்ள நண்பர்களுக்கு,

வாசிப்பதை நேசிக்கும் இரண்டு பேர் இணைந்து இந்த இணையத்தில் எழுத வந்திருக்கிறோம். தமிழ்மணத்திற்குத் தொடுப்புக் கொடுப்பதானால் குறைந்தபட்சம் மூன்று பதிவுகள் இடப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லக் கேள்வி. இந்த எழுத்து நீரோட்டத்தில் வந்து இணைந்துகொள்ளும் நீரோடைகளாக எங்களை ஏற்றுக்கொண்டு வரவேற்பீர்களென நம்புகிறோம். ஏற்கெனவே பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் இணையத்தில் எழுதத் துணிவதே பெரிய விடயந்தான். ஆனால், துணிந்தவர்க்குத் தோல்வியில்லை என்பார்கள். முயற்சித்துப் பார்க்கிறோம். வெல்லவும் தோற்கவும் இது பந்தயமல்ல. இதயங்கள் உணரும் மொழி எழுத்து. உணர்வதை எழுதுகிறோம். நன்றெனில் நயக்கவும் அன்றெனில் விலக்கவும் உங்களுக்கு உரிமையுண்டு.

பிரசன்னா,டெனிசியஸ்

Sunday, March 2, 2008

பெண் பெயரில் ஆண்கள் எழுதுவது சரியா?

பெண்களது பெயரில் ஆண்கள் எழுதுவது என்பதை சாதாரண நோக்கில் பெரிய பிரச்சனையாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை; என்ன பெயரில், என்ன பொருளில் எழுதுவது என்பது தனிமனித உரிமைகளில் ஒன்று என்றெல்லாம் ‘பெரும்போக்காக’ச் சொல்லி, இவ்விடயத்தைக் கடந்துபோய்விடவே முதலில் நினைத்தேன். ஆனால், நினைத்துப் பார்க்கும்போது ‘பெயரடையாளத்தை’யும் விட்டுக்கொடுத்துவிட்டு ஏதிலிகளாக நிற்பதில் ஒரு பெண் என்ற வகையில் எனக்கும் உடன்பாடில்லை. குடும்பத்தில், சமூகத்தில், அரசியலில், இலக்கியத்தில் எல்லாவற்றிலும் இரண்டாம்பட்சமாக்கப்பட்டுவிட்ட பெண்ணுக்கென எஞ்சியிருக்கிற அற்பசொற்ப ஆறுதல்களையும் பிடுங்கிக்கொண்டுவிடும் எத்தனங்களில் ஒன்றெனவே இதனைப் பார்க்கவேண்டியிருக்கிறது. பெண்களாகிய எமது பெயரும்கூடத் தனித்து நடக்கவியலாது துணைவருவது கணவனின் அல்லது தந்தையின் பெயர், நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகள் அடையாளப்படுத்தப்படுவதும் தந்தையின் பெயரால் என்றிருக்கும் நிலை போதவில்லையா? ‘இன்னமும்… இன்னமும்’என்ற பேராசையின் விளைவுதான் ஆண்கள், பெண்களின் பெயர்களில் எழுதுவதும் என்றெண்ணத் தோன்றுகிறது. ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து எழுதவேண்டிய சூழ்நிலையில் வாழ்பவர் எனில், தனது குரல்வளை நெரிக்கப்படலாம் என்று அஞ்சுகிறவர் எனில் வேறொரு புனைபெயரை (ஆண் பெயரை) வைத்துக்கொள்ள வேண்டியதுதானே…? அடக்குமுறை அராஜகங்களிலிருந்து தப்பிக்க, ஏற்கெனவே பால்சார்ந்து ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களின் எஞ்சியிருக்கும் உரிமைகளையும் பிடுங்கிக்கொள்வதென்பது வருந்தத்தக்கது. மேற்சொன்ன அச்சுறுத்தல்கள் ஏதுமின்றியே, சில மலின நோக்கங்களைக் கருத்திற்கொண்டு பெண் பெயரில் எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து, ‘நல்லா இருங்கய்யா’என்று சொல்லிச் செல்ல வேண்டியதுதான்.

தமிழ்நதி

-'அணங்கு' சஞ்சிகையில் வெளியானது.