Sunday, March 2, 2008

பெண் பெயரில் ஆண்கள் எழுதுவது சரியா?

பெண்களது பெயரில் ஆண்கள் எழுதுவது என்பதை சாதாரண நோக்கில் பெரிய பிரச்சனையாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை; என்ன பெயரில், என்ன பொருளில் எழுதுவது என்பது தனிமனித உரிமைகளில் ஒன்று என்றெல்லாம் ‘பெரும்போக்காக’ச் சொல்லி, இவ்விடயத்தைக் கடந்துபோய்விடவே முதலில் நினைத்தேன். ஆனால், நினைத்துப் பார்க்கும்போது ‘பெயரடையாளத்தை’யும் விட்டுக்கொடுத்துவிட்டு ஏதிலிகளாக நிற்பதில் ஒரு பெண் என்ற வகையில் எனக்கும் உடன்பாடில்லை. குடும்பத்தில், சமூகத்தில், அரசியலில், இலக்கியத்தில் எல்லாவற்றிலும் இரண்டாம்பட்சமாக்கப்பட்டுவிட்ட பெண்ணுக்கென எஞ்சியிருக்கிற அற்பசொற்ப ஆறுதல்களையும் பிடுங்கிக்கொண்டுவிடும் எத்தனங்களில் ஒன்றெனவே இதனைப் பார்க்கவேண்டியிருக்கிறது. பெண்களாகிய எமது பெயரும்கூடத் தனித்து நடக்கவியலாது துணைவருவது கணவனின் அல்லது தந்தையின் பெயர், நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகள் அடையாளப்படுத்தப்படுவதும் தந்தையின் பெயரால் என்றிருக்கும் நிலை போதவில்லையா? ‘இன்னமும்… இன்னமும்’என்ற பேராசையின் விளைவுதான் ஆண்கள், பெண்களின் பெயர்களில் எழுதுவதும் என்றெண்ணத் தோன்றுகிறது. ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து எழுதவேண்டிய சூழ்நிலையில் வாழ்பவர் எனில், தனது குரல்வளை நெரிக்கப்படலாம் என்று அஞ்சுகிறவர் எனில் வேறொரு புனைபெயரை (ஆண் பெயரை) வைத்துக்கொள்ள வேண்டியதுதானே…? அடக்குமுறை அராஜகங்களிலிருந்து தப்பிக்க, ஏற்கெனவே பால்சார்ந்து ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களின் எஞ்சியிருக்கும் உரிமைகளையும் பிடுங்கிக்கொள்வதென்பது வருந்தத்தக்கது. மேற்சொன்ன அச்சுறுத்தல்கள் ஏதுமின்றியே, சில மலின நோக்கங்களைக் கருத்திற்கொண்டு பெண் பெயரில் எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து, ‘நல்லா இருங்கய்யா’என்று சொல்லிச் செல்ல வேண்டியதுதான்.

தமிழ்நதி

-'அணங்கு' சஞ்சிகையில் வெளியானது.